பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அங்கு கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கனந்தல் பேரூராட்சியில் மொத்தமாக 18 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் இதற்கு 81 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் வாக்களிப்பதற்காக 21 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் அம்மாபேட்டை உள்பட 5 பகுதிகளில் இரண்டு வாக்குசாவடிகள் என மொத்தமாக ஐந்து வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியை தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பிற்காக போட வேண்டும் எனவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கும், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
பின்னர் வாக்களிக்க வரும் பொதுமக்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து கச்சராபாளையம் உள்பட 3 பகுதிகளில் இருக்கும் வாக்குச்சாவடிகளிலும் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்துள்ளார்.