தற்போது நடைபெற்ற திறனாய்வு தேர்வை மாணவர்கள் சிறந்த முறையில் எழுதியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு, நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறுகின்ற மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,250 ரூபாய் வீதம் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வரையிலும், முதுகலை மற்றும் இளங்கலை படிப்பு வரை 2000 ரூபாய் வீதம் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படும். அதன்பின் 2021-2022 ஆம் கல்வி ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4,089 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் இவர்களுக்காக 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வு அன்று மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களுக்கு திரண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, பின் முககவசம் அணிந்து வந்த மாணவர்களை மட்டுமே தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு முதல் தாள் தேர்வு தொடங்கியதால் இதை மாணவர்கள் ஆர்வமுடன் எழுதியுள்ளனர். மேலும் 11 மணி வரை நடைபெற்ற முதல் தாள் தேர்வுக்குப் பின் இடைவேளை விடப்பட்டு இரண்டாம் தாள் தேர்வு தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வை இம்மாவட்டம் முழுவதுமாக 3,945 மாணவர்கள் எழுதியுள்ளனர்.