சாலையோரம் நிறுத்தியிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரண்மனை குளம் ரோடு பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். இந்நிலையில் தங்கசாமி தனது ஆம்புலன்சை நாகல் நகர் ரவுண்டானா அருகில் இருக்கும் சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிவதை பார்த்த பொதுமக்கள் தங்கசாமிக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆம்புலன்ஸ் மற்றும் அருகில் கிடந்த குப்பையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸ் நிறுத்தியிருந்த இடத்திற்கு அருகில் கிடந்த குப்பை குவியலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன்பிறகு அந்த தீ ஆம்புலன்ஸ் வரை பரவி கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.