நாடு முழுவதும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பயனடையும் அடிப்படையில் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதற்காக மத்திய, மாநில அரசுகள் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன. இதனிடையில் வெளிமாநிலங்கள் அல்லது வெளிமாவட்டங்களில் வசிப்போரின் நலனுக்காக “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன் வாயிலாக ஒரு மாவட்டத்தில் (அ) மாநிலத்தில் கார்டு வைத்து கொண்டு வேறு எங்கேயாவது தங்கி இருந்தாலும், அருகிலுள்ள நியாயவிலை கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் முதல் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது பேப்பர் அட்டைகள் மாற்றம் செய்யப்பட்டு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களிடமிருந்து பயோ-மெட்ரிக் தகவல்கள், செல்போன் விபரங்கள் சேகரித்து பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் புது சிக்கல் ஒன்று நிலவியுள்ளது. என்னவென்றால் வெளி மாவட்டங்களில் இருந்து கோவையில் தங்கி பணிபுரிந்து வருபவர்கள் தங்களுடைய ரேஷன் அட்டைகளை அருகில் உள்ள நியாயவிலை கடைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பரிசுத் தொகுப்பை முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. அப்போது தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து புகார்கள் பெறப்பட்டது. இதில் கோவை மாவட்டமும் ஒன்றாகும். இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கோவையில் வெளிமாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புதிதாக ஒரு குற்றச்சாட்டு பெறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெளிமாவட்ட மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து கோவை உணவு பொருட்கள் வழங்கல் துறை அலுவலர் எம்.சிவகுமாரி கூறியபோது, பயோ-மெட்ரிக் மூலம் மட்டுமே வெளிமாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க முடியும். இந்த நிலையில் பொங்கல் தொகுப்பு வழங்கியபோது பயோ-மெட்ரிக் கருவியில் ஏற்பட்ட பிரச்சினையால் வெளிமாவட்டங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போதுதான் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் முடிவடைந்துள்ளது. ஆகவே இனி வெளிமாவட்டங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு எல்லா கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிமாவட்ட மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க மறுப்பு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது வட்ட வழங்கல் அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் என்று கூறினார்.