தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இந்த தீர்மானத்தை பல நாட்களாக கிடப்பில் போட்டு பின்னர் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பி வைத்தார். தற்போது ஆளுநர் இந்த தீர்மானத்தை திருப்பி அனுப்பி வைத்ததற்கான காரணம் குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, நீட் தேர்வு தகுதியானவர்களுக்கு எதிரானது என்ற உயர்நிலைக் குழுவின் அறிக்கை தவறானது என்றும் அதோடு பல்வேறு ஆதாரமற்ற அனுமானங்கள் இந்த தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் ஆளுநர் தரப்பு கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீட்தேர்வு என்ற ஒன்று இல்லை என்றால் பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பார்கள் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது, ஆனால் நீட் தேர்வுக்கு முன்பு வரை வெறும் 1% அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. என ஆளுநர் மாளிகை தரப்பு கூறியுள்ளது.