மயானத்திற்கு செல்ல முடியாமல் தடுப்பு பாதை அமைத்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாழனூர் கிராமத்தில் மேட்டு தெரு பகுதி வழியாக ஒரு பாதை அமைந்திருக்கிறது. இந்தப் பாதையை ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒருவர் தானமாக கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அவ்வழியாக மயானத்திற்கு செல்வதற்கும், அருகில் இருக்கும் கிராமங்களுக்கு செல்வதற்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது திடீரென அந்தப் பாதை வழியாக யாரும் செல்ல முடியாத வகையில் தனிநபர் ஒருவர் தடுப்பு ஏற்படுத்தியுள்ளார்.
பின்னர் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அவரை தட்டிக் கேட்டுள்ளனர். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது இறுதி சடங்கு நடத்துவதற்கு பொது பாதையில் இருந்த தடுப்புகளை அகற்றும் படி தனிநபரிடம் கிராமமக்கள் கேட்டதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இதில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.