அரசு பேருந்து மீது கல்வீசிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி பெரியசாமி நகர் மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்த போது அங்கு மது போதையில் 2 பேர் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து திடீரென அந்த 2 பேர் பேருந்து மீது கல்வீசி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.
இதுகுறித்து பேருந்து டிரைவர் செல்வராஜ் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பெரியசாமி நகர் மேம்பாலம் பகுதியில் வசிக்கும் கோபிகண்ணன் மற்றும் அரவிந்த் ஆகியோர் கண்ணாடியை உடைத்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.