Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது அருந்திய கல்லூரி மாணவர்களைக் கல்லூரியிலிருந்து நீக்கியது தவறு!

சென்னை: மது அருந்திய கல்லூரி மாணவ மாணவிகள் படிக்கத் தேவையான நடவடிக்கைகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் எடுக்க வேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “சமூக வலைதளங்களில் பரவும் மயிலாடுதுறை தனியார் கல்லூரி முதல்வரின் உத்தரவு எங்கள் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒழுங்கு நடவடிக்கை என்று மூன்று மாணவிகளையும், ஒரு மாணவரையும் நிரந்தரமாக கல்லூரியிலிருந்து நீக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் மது அருந்தியதால் அவ்வாறு செய்துள்ளதாகத் தெரிந்தது. அந்த தனியார் கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மது அருந்துவது சட்டப்படி குற்றமல்ல. டாஸ்மாக் என்பது தமிழ்நாடு அரசின் மது கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனம் ஆகும். மது அருந்துவது குற்றமென்றால் அரசே அதை விற்காது.

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937இன்படி மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அதை அரசே செய்ய வேண்டிய நிலையுள்ளது. சட்டம் இவ்வாறு இருக்கும்போது, நண்பர்களான ஆணோ, பெண்ணோ, இணைந்து மது அருந்துவதும் சட்டப்படி குற்றமல்ல. கடினமான உடல் உழைப்பு செய்யும் பெண் தொழிலாளர்கள், தங்கள் உடல் வலி நீங்க அவ்வப்போது மது அருந்தும் பழக்கம் கொண்டுள்ளனர்.

மாணவர்கள் மது அருந்தியுள்ளது நிச்சயமாக சமூக பிரச்னைதான். ஆனால் சட்ட பிரச்னை கிடையாது. சமூக பிரச்னையை களையத்தான் கல்வி கூடங்கள் உள்ளன. மாணவர்கள் செய்த சிறு தவறுக்காக, அவர்களை தற்காலிகமாக நீக்குவது, உளவியல் ஆலோசனைகள் கொடுப்பது, அபராதம் விதிப்பது போன்று நடவடிக்கைளை எடுக்காமல் நிரந்தரமாக அவர்களை நீக்கியது தவறு.

எனவே, சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் அதன் நிலைப்பாட்டை மாற்றி, மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அவர்கள் சில நாள்கள் சமூக சேவை செய்வதை தண்டனையாக கொடுக்கலாம். பாதியிலேயே படிப்பு கைநழுவிப்போய் அவர்கள் வாழ்க்கை முழுக்க தண்டனை பெற வேண்டாம்.

தவறை உணர்ந்து திருந்தும் மாணவரே உயர்ந்த நிலைக்கு வர சாத்தியக்கூறுகள் அதிகமாகும். கல்வி சேவை செய்யும் கல்லூரியானது, அதை அரை குறையாக செய்யாமல் முழுமையாக செய்ய வேண்டும். இதனை பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்னின்று நடத்திவைக்க வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.

 

Categories

Tech |