Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அவை கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதையடுத்து ரேஷன் ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருந்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை தாங்களே பாக்கெட் செய்தும், மற்ற பொருட்கள் ஒவ்வொன்றையும் சரிபார்த்தும்  அட்டைதாரர்களிடம் வழங்கினர். இதன் காரணமாக அவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டது.

இப்பணிக்காக 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்குமாறு ஊழியர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனை கண்டுகொள்ளாத அரசு, பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இருந்ததாக புகார் எழுந்ததும், ரேஷன் ஊழியர்களுக்கு கார்டுக்கு தலா, 50 காசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இத்தொகையை ரேஷன் கடைகளை நடத்தக்கூடிய கூட்டுறவு சங்கங்கள் வழங்குவதை உறுதி செய்யுமாறு, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியது. இதனிடையில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதியுடன் பொங்கல் பரிசு வழங்கும் பணி முடிந்து விட்டது.

ஆனால் இதுவரையிலும் ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான பணிகளை, கூட்டுறவு சங்கங்கள் தொடங்காமல் தாமதம் செய்கின்றன. இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது, லாரிகளில் அனுப்பப்பட்ட கரும்பை இறக்கி வைக்கும் கூலியை, ஊழியர்கள் தங்கள் பணத்தில் தந்தனர். ஆகவே அதனையும் அதிகாரிகள் தராத நிலையில், ஊக்கத்தொகையும் தர தாமதிக்கின்றனர். எனவே கார்டுக்கு 50 காசு என்பதனை 5 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இதனை உடனே பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

Categories

Tech |