நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா ஓபனர் ரோஹித் ஷர்மா 60 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி முதல் பந்தை எதிர்கொண்டார். அப்போது அந்த பந்து எட்ஜ் ஆகி பவுண்டரி சென்றது. அதனைத் தொடர்ந்து அல்ஜாரி ஜோசப் வீசிய 2-வது பந்தும் பவுண்டரி சென்றது.
அப்போது கோலி மீது எதிர்பார்ப்பு எகிறியது. இதையடுத்து அல்ஜாரியிடம் சென்ற கேப்டன் பொல்லார்ட் பவுன்சர் வீசு என்பதை தலையில் கை வைத்து சிக்னல் செய்து காட்டினார். பின்னர் அல்ஜாரி ஜோசப் அடுத்த பந்திலேயே தரமான பவுன்சரை வீசினார். இதனால் கோலி திணறினார். இருப்பினும் கீழே குனிந்து அந்த பந்தை தவிர்த்து விட்டார். இதையடுத்து கோலி அடுத்த பந்தையும் பவுன்சர் தான் வீசுவார் என்பதை புரிந்துகொண்டு கால்களை அதற்கேற்றவாறு நகர்த்தி நின்றார்.
இருப்பினும் அல்ஜாரி அடுத்த பந்தும் பவுன்சராக தான் வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட கோலி புல் ஷாட் அடித்த நிலையில் பைன் லெக் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த கேமர் ரோச் கேஜ் அந்த பந்தை பிடித்தார். எனவே இந்த திசையில்தான் கோலி பந்தை தூக்கி அடிப்பார் என்பதை தெரிந்து கொண்டது போலவே இரண்டு பேர் பைன் லெக் பவுண்டரி லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இது கேப்டன் பொல்லார்ட்டின் திட்டம்.
அதன் பிறகு 2 பவுண்டரிகள் சென்றவுடன் பொல்லார்ட் பவுன்சர் போட சொல்லிவிட்டு பீல்டர்களை செட் செய்தார். எனவே இனிவரும் போட்டிகளிலும் இதே திட்டத்தை தான் பொல்லார்ட் செயல்படுத்துவார் என்று கூறப்படுகிறது. எனவே கோலிக்கு சவால் விடும் பொல்லார்ட்டின் திட்டத்தை எதிர்த்து அடுத்தடுத்து வரும் போட்டிகளில் கோலி நிச்சயம் துவம்சம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த போட்டியில் விராட் கோலி Vs அல்ஜாரி ஜோசப் யுத்தம் அதிகம் கவனம் பெறும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.