மத்திய ஆயுதக் காவல் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) அலுவலகத்தின் புதிய தலைமையக கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று (டிச.29) நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். விழாவில் பேசிய அமித் ஷா, “நரேந்திர மோடி அரசாங்கம் சிஆர்பிஎஃப் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு சிஆர்பிஎஃப் வீரனும் தங்கள் குடும்பத்தினருடன் ஆண்டுக்கு 100 நாள்கள் செலவிடும் வகையில் நடவடிக்கை எடுக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது.
நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக மூன்று லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.சிஆர்பிஎஃப் புதிய தலைமையகம், சிபிஐ அலுவலகம் அருகே அமைக்கப்படுகிறது. இந்தக் கட்டடம் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.277 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது.
இதன் பணிகள் 2022ஆம் ஆண்டு நிறைவடையும். 11 மாடிகள் கொண்ட புதிய கட்டடத்தில் கோப்ரா வீரர்களுக்கும் அறைகள் ஒதுக்கப்பட உள்ளன. அரங்கம், மருத்துவ வசதிகள், தொலைத்தொடர்புகள், வேலைவாய்ப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நிறுவப்படவுள்ளன. இதுமட்டுமின்றி 520 கார்கள், 15 பேருந்துகள் ஆகியவற்றை நிறுத்துமிடமும் அமைக்கப்பட உள்ளது.