மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லியில் நேற்று (டிச. 29ஆம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் காவல் துறை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) பிரசாந்த் குமார் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த நக்வி, “அது உண்மையாக இருக்குமேயானால் நிச்சயமாக அது கண்டனத்திற்குரியது. அந்தக் காவல் அலுவலர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும் ஜனநாயகத்தில் வன்முறை ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்று கூறிய அவர், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை தேவை என்றும் கேட்டுக் கொண்டார். மீரட் காவல் காவல்துறை கூடுதல் இயக்குனர் (ஏ.டி.ஜி) பிரசாந்த் குமார் தோன்றும் அந்தக் காணொலிக் காட்சியில், போராட்டக்காரர்கள் கல்லெறியும் காட்சி பதிவாகியிருந்தது.
மேலும் அதில் பேசும் காவல் அலுவலர் பிரசாந்த் குமார், போராட்டக்காரர்களை நோக்கி பாகிஸ்தான் செல்லுங்கள் எனக் கூறியிருந்தார். பிரசாந்த் குமாரின் செயலுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, செய்தியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.