பிடதி ஆசிரம தலைவரான நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா இருவரும் நெருக்கமாக இருந்தது போன்ற ஒரு வீடியோ தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதனையடுத்து நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக சித்தரிக்கப்பட்ட அந்த வீடியோ காட்சியை காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக, நித்யானந்தா தியான பீட நிர்வாகி சென்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்படி லெனின், ஐயப்பன், ஆர்த்தி ராவ் உள்ளிட்ட பல பேர் மீது சிபிசிஐடி பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கை மறு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடக்கோரியும், ஆர்த்திராவ், பரத்வாஜ் இடையில் நடந்த இ-மெயில் உரையாடலையும், கர்நாடக மாநில அமர்வு நீதிமன்றத்தில் உள்ள மார்பிங் வீடியோ கேசட் தொடர்பாக மீண்டும் விசாரிக்க கோரியும் நடிகை ரஞ்சிதா மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரஞ்சிதா தரப்பில் இவ்வழக்கை நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின் நேரடி விசாரணைக்கு அனுமதி வழங்கி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.