ஆட்டோவில் வந்த ரவுடிகள் நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் பொதுமக்கள் 4 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நள்ளிரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் மாணிக்கத்தை சரமாரியாக வெட்டினர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் புண்ணியகுமார், பிரபாகரன், வினோத் ஆகிய 3 பேரையும் ஆட்டோவில் வந்தவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை அடுத்து தி.மு.க பிரமுகரான ஸ்ரீராம் என்பவரது கார் கண்ணாடியை அவர்கள் அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் சந்தேகப்படும் படியாக கத்தியுடன் சுற்றி திரிந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அம்பத்தூர் முருகம்பேடு பகுதியை சேர்ந்த ரவுடியான கணேஷ் குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து மது போதையில் மாணிக்கம் உள்பட 4 பேரையும் அரிவாளால் வெட்டியதாக காவல்துறையினரிடம் ஒப்பு கொண்டுள்ளார். அதன்பின் காவல்துறையினர் கணேஷ் குமாரை கைது செய்து, தப்பி ஓடிய அவரது கூட்டாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.