சமீப காலமாகவே ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சட்ட விரோதமாக பாலியல் தொழில், சூதாட்டம் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் வழக்கு ஒன்றில் கிளப்களில் நுழைவு, வெளியேறும் பகுதிகள் மற்றும் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் குறிப்பிட்ட காலத்தில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் கிளப்களில் சூதாட்டம் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சுற்றறிக்கை மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடியான உத்தரவால் பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெறாது என்று பொதுமக்களிடையே நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.