நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி வலுவான தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் பல நாட்களாக கிடப்பில் போட்டு பின்னர் அதனை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக வலுவான மசோதா நிறைவேற்றப்படும் என தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
அதன்படி இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, “நீட் தேர்வு என்பது மாணவர்களின் உயிரை குடிக்க கூடியது. இது நீட் தேர்வு அல்ல பலிபீடம். ஊரகப் பகுதியில் உள்ள மாணவர்களை மருத்துவ படிப்புக்கு நுழையவிடாமல் தடுக்கிறது. இந்த நீட் தேர்வு மாணவர்களின் கனவை நிறைவேற்ற விடாமல் தடுப்பு சுவர் அமைகிறது. இந்த நீட் சில மாணவர்களை கல்லறைக்கும் சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் கொண்டு செல்கிறது. இந்த நீட் தேர்வு இப்படிப்பட்ட தேர்வு தமிழகத்திற்கு தேவைதானா…?” என அவர் பேசியுள்ளார்.