தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் கே. என். ரவி இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஏதோ சில காரணங்களை கூறி ஏற்றுக்கொள்ள தகுந்ததாக இல்லை என மீண்டும் சட்டசபைக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து திமுக தலைமையில் கடந்த 5 ஆம் தேதி மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதோடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக வலுவான மசோதா நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த வகையில் இன்று சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக காரசார விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் உரையாற்றிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் அதனை மீண்டும் சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு இருக்க மறுபடியும் எதற்காக நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இந்த திமுக அரசு தேவையில்லாத வேலையை செய்து வருகிறது.
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என திமுகவினர் கூறுகின்றனர். ஆனால் நீட் தேர்வின் மூலம் சமூகநீதி கட்டமைக்கப்படுகிறது. திறமையுள்ள மாணவர்கள் மருத்துவராக்கப்படுகின்றனர். இதில் எந்த தவறும் இல்லையே..!” என கூறினார். இதன் பின்னர் மற்றொரு உறுப்பினர் பேசத் தொடங்கியுள்ளார் அப்போது, நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு பேசியுள்ளார். இதை கவனித்த சபாநாயகர் “வெளியே போவதற்கு இவ்வளவு பில்டப் கொடுக்கணுமா..?” வெளியே போக நினைத்தால் தயவு செய்து கிளம்புங்கள் என நயினார் நாகேந்திரன் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.