மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தம்பிபட்டி கிராமத்தில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவருடன் சேர்ந்து வத்திராயிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து இசக்கிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இசக்கிமுத்து மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிமுத்து மற்றும் சின்னத்தம்பி ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.