Categories
தேசிய செய்திகள்

‘CAA – NRC குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை’ – வெங்கையா நாயுடு..!

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாரி சன்னா ரெட்டியின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து மக்கள் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும். சட்டம் எதற்கு கொண்டு வரப்பட்டது, எப்போது கொண்டு வரப்பட்டது, அதனால் நிகழவுள்ள விளைவுகள் என்ன ஆகியவை குறித்து நாடாளுமன்றம், ஊடகம் ஆகியவற்றில் விவாதம் நடைபெற வேண்டும்.

சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் எனில், அதுகுறித்த ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டும். இப்படி விவாதித்தால்தான் நமது அமைப்பு வலுப்பெறும். மக்களுக்குத் தெளிவு ஏற்படும். மாற்றுக் கருத்தே ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கை. நமக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ எதிர்வாதத்தை கேட்க வேண்டும். சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் வன்முறை நிகழக் கூடாது.

தனிநபர் தாக்குதலை மேற்கொள்ளக் கூடாது. கொள்கையை மட்டுமே விமர்சிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இமாச்சலப் பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசையா ஆகியோர் பங்கேற்றனர்.

Categories

Tech |