தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
முதல் கட்டத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 260 பதவியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான 2,546 பதவியிடங்களுக்கும் கிராம ஊராட்சித் தலைவருக்கான 4,700 பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 37,830 பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவின் போது புகார் அளிக்கப்பட்ட 30 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 255 பதவியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான 2,554 பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான 4,924 பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 38,916 பதவியிடங்களுக்கும் நடைபெற்ற இவ்வாக்குப்பதிவானது இன்று மாலை ஐந்து மணியளவில் நிறைவடைந்தது. இதில் மாலை 3 மணி நேர நிலவரப்படி, 61.45 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
இரண்டு கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2ஆம் தேதி அன்று தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.