வீடு புகுந்து கொத்தனாரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மன்னம்பந்தல் அச்சுதராயபுரம் கிராமத்தில் கொத்தனாரான அருள்பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அருள்பூபதிக்கும் சுஜாதாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த சுப்பிரமணி மற்றும் மன்னார் ஆகியோர் உள்ளே புகுந்து அருள்பூபதியை கத்தியால் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த அருள்பூபதியை அவரது மனைவி மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் சுஜாதா அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணி மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் மன்னார் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.