சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்வழி ஓடைகள், குளம், குட்டை, பாசன கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் மீது எந்த விதமான பதிவும் மேற்கொள்ளக்கூடாது என பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பத்திரப்பதிவின் போது சொத்தானது நீர்நிலையில் இல்லை என்பதற்கான சான்று அல்லது உறுதிமொழி பெற வேண்டியது அவசியம். எனவே நிலத்தை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு முன்பு மக்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.