இளம் பெண்ணை காதலிக்கும் விவகாரத்தில் நண்பர்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமார் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். மேலும் சந்தோஷ் குமாரின் நண்பரான சரண் என்பவரும் அந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவருமே இளம் பெண்ணிடம் தங்களது காதலை தெரிவித்ததால் இளம்பெண் குழப்பத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் சந்தோஷ்குமார் உனது காதலை கைவிட்டு விலகிச் செல் என சரணிடம் கூறியுள்ளார். ஆனால் சரண் அதற்கு சம்மதிக்காததால் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த நண்பர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். அப்போது சரண் சந்தோஷ் குமாரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த சந்தோஷ் குமார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான சரணை தீவிரமாக தேடி வருகின்றனர்.