தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மூலம் நிரப்பபட்டு வருகிறது. கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக போட்டித் தேர்வுக்கு தயாரான லட்சக்கணக்கான நபர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த வருடம் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் இம்மாதம் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான பணியிடத்தில் 5831 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், குரூப் 4 தேர்வுக்கான பணியிடத்தில் 5255 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த போட்டித் தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தேர்வு கால அட்டவணையில் அறிவித்தப்படி இம்மாதம் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும். அவ்வாறு வெளியான அடுத்த 75 நாட்களில் தேர்வு நடைபெறும் என்று உறுதி அளித்துள்ளார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 32 வகையான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் அறிவித்தப்படி தமிழ் மொழி தகுதி தாள் கட்டாயமான முறையில் நடத்தப்படும் எனவும் TNPSC தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.