மத்திய அரசின் உடான் திட்டத்தின் வாயிலாக நாட்டிலுள்ள சிறுநகரங்களில் இருந்து மாநிலங்களில் தலைநகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2018 மார்ச் முதல் ட்ரூ ஜெட் நிறுவனமானது இந்த மார்க்கத்தில் விமானங்களை இயக்கி வந்தது. வெறும் 1,450 ரூபாயில் சில நிமிடங்களிலேயே சேலத்திலிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்துக்கும் பயணம் செய்து விடலாம் என்பதால் இந்த விமான சேவைக்கு தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என்று பல தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் 2021 மார்ச் வரை விமானங்களை இயக்க அனுமதி பெற்றிருந்த ட்ரூ ஜெட் நிறுவனம், அதன் பின் அனுமதியை புதுப்பி்க்காததால் சேலம்- சென்னை மார்க்கத்தில், கிட்டதட்ட கடந்த ஓராண்டாக விமானங்கள் இயக்கப்படவில்லை. இவ்வழித்தடத்தில் மீண்டும் விமானங்களை இயக்க பல்வேறு தரப்பினரும் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சேலம் மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த தொகுதியின் திமுக எம்பி பார்த்திபன், இது குறித்து நாடாளுமன்ற மக்களவையிலும், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடமும் தொடர்ந்து பேசி வந்தார்.
அதனை தொடர்ந்து உடான் திட்டத்தின் கீழ் டர்போ மெகா ஏர்வேஸ் நிறுவனம், சேலம் -சென்னை இடையே விமானங்களை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளது. ஆகவே அடுத்த மாதம் முதல் (2022 மார்ச்) இந்த சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் விஜய்குமார்சிங், சேலம் எம்பி பார்த்திபனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.