இந்திய அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பையில் வென்றாக வேண்டும் என்ற நோக்கத்தோடு தயாராகி வருகிறது. இருப்பினும் இந்திய அணியில் ஓபனருக்கான இடத்தில் அதிக போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவன் உள்ளிட்டோர் ஓபனருக்கான போட்டியில் உள்ளனர். அதில் மிடில் வரிசையில் விளையாடக் கூடியவர் ராகுல் மட்டுமே.
அதாவது மிடில் வரிசையில் களமிறங்கிய போது தான் ராகுல் அதிக ரன்களை குவித்துள்ளார். எனவே 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பையில் ராகுல் மிடில் வரிசையில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ராகுல் 21 போட்டிகளில் ஓபனராக களமிறங்கியுள்ளார். மேலும் இதுவரை 46.52 சராசரியுடன் 3 சதங்கள் உட்பட 884 ரன்களை குவித்துள்ள ராகுல், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த 2016-ஆம் ஆண்டில் முதல்முறையாக களமிறங்கினார்.
அப்போது அவர் மிடில் வரிசையில் தான் களமிறக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து இடங்களை மாற்றி வந்ததால் 2017-ஆம் ஆண்டில் ராகுலின் சராசரி ஒற்றை இலக்கமாக குறைந்தது. பின்னர் மீண்டும் ராகுல் சிறப்பாக விளையாட தொடங்கியதால் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் போது அவருக்கு நான்காவது இடம் கிடைத்தது. மேலும் ஷிகர் தவன் அப்போது காயம் காரணமாக விலகியதால் ராகுலுக்கு ஓபனராக களமிறங்க வாய்ப்பு கிடைத்தது.
இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த தொடரில் ராகுல் சிறப்பாக விளையாடினார். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஷிகர் தவன் அணிக்கு திரும்பியதால் 2020-ஆம் ஆண்டில் ராகுலுக்கு 5-வது இடம் வழங்கப்பட்டது. அப்போது ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ராகுல் 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அசத்தினார். எனவே இந்திய அணி நிர்வாகம் ராகுலை ஐந்தாவது இடத்தில் களமிறக்கினால் அவர் அதிக ரன்களை குவிப்பார் என்று தெரிந்து கொண்டு அந்த ஆண்டில் அவருக்கு ஐந்தாவது இடத்தை வழங்கி வந்தது.
அதனை தொடர்ந்து 10 போட்டிகளில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய ராகுல் 56.52 சராசரி மற்றும் 111.81 ஸ்ட்ரைக் நேட்டுடன் 453 ரன்களை குவித்து அசத்தினார். ஆனால் ஓபனராக 46.52 சராசரி மட்டுமே ராகுல் வைத்துள்ளார். மேலும் ருதுராஜ், ரோஹித், தவன் ஆகியோரிடையே ஓபனருக்கான இடங்களில் போட்டி நிலவுவதால் 2023-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை காரணமாக ராகுல் மீண்டும் மிடில் வரிசைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கும் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி படு மட்டமான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்து வருகிறார். எனவே வருகின்ற 2023-ஆம் ஆண்டில் ஒருநாள் உலக கோப்பையை கருத்தில் கொண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மீண்டும் ராகுலை நியமித்து விட்டு டி20 போட்டிகளில் மட்டும் ரிஷப்பை விளையாட வைக்க வாய்ப்புள்ளது.