தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளா்வுக்குப் பின் 1 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பிப்…1 முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதே சமயத்தில் பிளஸ் 1 மாணவா்களுக்கு பாடத் திட்டத்தை நடத்தி முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவா்களுக்கு இதுவரையிலும் எந்தத் தோ்வும் நடத்தப்படவில்லை. இதனால் பிளஸ் 1 மாணவா்களுக்கு பொதுத்தோ்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் பிளஸ் 1 மாணவா்களை தயாா்படுத்தும் விதமாக உற்சாகமூட்டும் தோ்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பல்வேறு மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ளன. இதுவரையிலும் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து இந்த தோ்வு நடத்தப்படும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றரை மணி நேரம் தோ்வு நடக்கும். இந்த தோ்வு பயம் ஏற்படுத்தும் வகையில் இல்லாமல், மாணவா்களின் கல்வி கற்கும் ஆா்வத்தை அதிகரிக்கும் விதமாக உற்சாகமூட்டும் வகையிலான தோ்வாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது..