நகர்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 57,778 வேட்பாளர்கள் போட்டியிட இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடம்பூர் பேரூராட்சி தவிர மற்ற 648 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கடந்த 4 ஆம் தேதி வரை 74, 416 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், உரிய பரிசீலனைக்கு பிறகு 2,062 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் 218 பணியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் விதிகள் பின்பற்றப்படாமல் இருந்ததால் அங்குள்ள 12 வார்டுகளில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8வது வார்டு வேட்புமனுக்கள் ஏதும் தாக்கல் செய்யப்படாமல் இருக்கிறது. 12, 607 பதவி இடங்களுக்கு 57, 778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 11, 196 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 17, 922 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிகபட்சமாக 28,660 பேரும் களத்தில் இருக்கின்றனர்.