Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு இப்படியொரு செக்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பயிற்சி நடைபெறும் நாட்களில் ஆசிரியர்கள் சம்பளத்துடன் நேரடியாக பயிற்சியில் கலந்து கொள்வார்கள். அந்த பயிற்சியில் அவர்கள் கற்றுக்கொண்டது தொடர்பாக எவ்விதமான அளவீடுகளும் இல்லாமல் இருந்தது.

ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தாலும், மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் பயிற்சியை முழுமையாக கற்றுக் கொள்கின்றனரா..? என்பதனை ஆய்வு மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முதன் முறையாக சான்றிதழ் உடன் கூடிய பயிற்சி அளிக்கிறது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1- 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 12 கட்டகங்கள் கொண்ட புத்தகத்தை தயார் செய்துள்ளது. இவற்றில் காணொளிகள், செயல்பாடுகள் மற்றும் மதிப்பீடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் பயிற்சி பெறக்கூடிய ஆசிரியர்கள் ஒவ்வொரு கட்டகத்தின் முடிவிலும் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவர். அதில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெற்றிருப்பின் அவர்களுக்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெறாவிடில் மீண்டும் அந்த கட்டகத்தில் அதே பயிற்சியை பெறுதல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் ஆன்லைன் மூலமாக நேற்று(பிப்..9) முதல் வரும் மார்ச் மாதம் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் 80 ஆயிரத்து 85 ஆசிரியர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 28 ஆயிரத்து 190 ஆசிரியர்கள் என்று மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 275 ஆசிரியர்கள் பயிற்சி பெற இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |