அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இருப்பதாவது, அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவதில் ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் போன்றவை முக்கியப் பங்காற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வாறு உணவுப் பாதுகாப்பின் அங்கங்களாக விளங்கும் இதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன.
தமிழகத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கியவுடன் அவர்களுடைய கைபேசிகளுக்கு என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டன என்ற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன. இதனிடையில் வாங்கப்படாத பொருட்களும் வாங்கப்பட்டதாக குறுஞ்செய்திகள் வருவதாக தகவல் வெளியாகியது. உதாரணமாக ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்ற பொருட்களை வாங்க தகுதியுடையவர்களாக இருந்தாலும், ஏராளமானோர் ஓரிரு பொருட்களை மட்டும், குறிப்பாக சர்க்கரையை மட்டும் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அவ்வாறு ஓரிரு பொருட்களை வாங்கிச் செல்பவர்களின் கைபேசிகளுக்கும் அனைத்துப் பொருட்களையும் பெற்றுக் கொண்டதாக குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதன் வாயிலாக அந்தப் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதே போன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகிய பொருட்கள் அனுப்பப்படுவதாகவும், அவ்வாறு அனுப்பப்படும் பொருட்களின் ஒவ்வொரு மூட்டையிலும் குறைந்தபட்சம் 2 கிலோ எடை குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதாவது மாதந்தோறும் 15 ஆயிரம் டன் தானியங்கள் குறைவாக விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் வாயிலாகவும் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, கிடங்குகளிலிருந்து ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் அனுப்பப்படுவதில்லை. ஒவ்வொரு மூட்டையிலும் குறைந்தபட்சம் 2 கிலோ எடை குறைவாக உள்ளதால், இதனை சரிகட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு எடை குறைத்து பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆகவே இதற்குக் காரணம் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள்தான் என்று தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
அதே சமயத்தில் இது தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி கூறியபோது, கிடங்குகளில் இருந்து சரியான அளவில் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும், ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தான் தங்களின் தவறை மறைக்க கிடங்குகளின் மீது பழி போடுவதாக கூறுகிறார். இதை தடுத்து நிறுத்தினாலே அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும் எனவும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் சரியான எடையில் பொருட்கள் கிடைக்க வழிவகை ஏற்படும் எனவும் பொதுமக்கள் கருதுகிறார்கள். ஆகவே முதல்வர் இதில் உடனே தலையிட்டு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளிலும், ரேஷன் கடைகளிலும் நடைபெறும் முறைகேட்டினை தடுத்து நிறுத்தி சரியான எடையுள்ள பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.