தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணி இடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் போட்டி தேர்வுகள் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த அடிப்படையில் குரூப்2 மற்றும் 4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதிக தேர்வர்களால் எழுதப்படும் குரூப்4 தேர்வு தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 15ம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் , அக்டோபர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதையடுத்து நவம்பர் மாதம் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 15ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதிகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் போன்றவையும் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ள இருப்பவர்கள் தங்களது அழைப்பு கடிதத்தை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த அழைப்பு கடிதத்தில் கலந்தாய்வு நேரம், தேதி மற்றும் தேவையான விவரங்கள் இடம் பெற்றிருக்கும். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பு கடிதம் தனியாக தபால் மூலமாக அனுப்பப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.