திருமணமான 8 மாதங்களில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாண்டமங்கலம் பகுதியில் கார்த்திக்(32) என்பவர் வசித்து வருகின்றார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சேந்தமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமி தனது பெற்றோர் வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டின் பின்புறம் இருந்த மா மரம் ஒன்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சேந்தமங்கலம் காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து காவல்துறையினர் மற்றும் உதவி கலெக்டர் மஞ்சுளாவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.