ரயிலில் அடிபட்டு வடமாநில வாலிபரை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் தலை துண்டித்த நிலையில் ஒரு வாலிபர் பிணமாக கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்த வாலிபரின் அருகில் ஒரு பை இருந்ததை பார்த்தனர். அந்த பையிலிருந்த அடையாள அட்டையில் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள படாதாகான் பகுதியில் வசிக்கும் சுக்தேவ் படேல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை மேற்கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுக்தேவ் படேல் ஆசிரியர் பயிற்சி முடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுக்தேவ் படேல் பிப்ரவரி 1-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் சுக்தேவ் படேலின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுக்தேவ் படேல் ரயிலில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.