புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் துளையிட்டு சிமெண்ட் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமாயன்தோப்பு பிர்கேட் சிட்டி அருகாமையில் யாசின் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகின்றார். இந்நிலையில் கட்டுமான பணிகள் முடிந்ததும் கேட்டை பூட்டி விட்டு அவர் அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் சுவரில் துளை இடப்பட்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த யாசின் உள்ளே சென்று பார்த்ததில் 80 சிமெண்டு மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது பற்றி யாசின் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.