நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை அறிமுகம் செய்து அண்ணாமலை தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்து 8 மாத காலங்களில் சாதனை செய்து விட்டோம் சாதனை செய்து விட்டோம் என கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை மக்களுக்கு வேதனையைத் தான் கொடுத்து வருகின்றனர். எதைக் கேட்டாலும் லஞ்சம், கமிஷன் இது தான் திமுக ஆட்சியின் 8 மாத கால சாதனை . மத்திய பாஜக கொண்டு வந்த ஜல்சக்தி திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானோர் பயன் அடைந்துள்ளனர். பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களின் வீடு கட்டி பயனடைந்து வருகின்றனர்.
இவ்வாறு பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு பல்வேறு நன்மைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் காங்கிரஸ் ஆட்சியில் ஏதேனும் ஒரு நல்ல திட்டம் தமிழகத்தில் நடந்துள்ளதா? என்று கேட்டால் இல்லவே இல்லை என்பதுதான் பதில். 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்றெல்லாம் கூறிய உதயநிதி ஸ்டாலின் தற்போது துபாயில் உள்ளார். போதும்பா உங்க ரீல் அந்து போச்சு தயவு செஞ்சு கொஞ்சம் திருந்துங்க. இவ்வாறு அவர் கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலின் துபாயில் இருப்பதாக கூறிய அதே சமயத்தில் அவர் கரூர் பகுதியில் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.