லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கெருகம்பக்கம் பகுதியில் தங்க பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மினி வேனில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி நோக்கி புறப்பட்டுள்ளார். இந்த வேனை பாண்டியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து மேல்மருவத்தூர் அருகில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மீது மினி வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்க பாண்டியன், அவருடைய மாமனார் வீரன், மகள் யாழினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த டிரைவர் பாண்டியன், உறவினர்களான ரமேஷ், அமுதா, தீபிகா, ஹரிதா உள்பட 12 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தங்க பாண்டியன், வீரன், யாழினி ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.