தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியில் 2,207 இடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க (பிப்..12) போட்டி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு ஆசிரியர் கல்வி வாரியமான TRB சார்பாக கணினி வழியில் நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 160 முதல் 180 மையங்கள் வரையிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையில் மொத்தம் 2.6 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, தேர்வு எழுத வருபவர்கள் கொரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்தியிருக்க வேண்டும்.
அவ்வாறு தடுப்பூசி செலுத்தாதவர்கள் தேர்வு நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா சோதனை மேற்கொண்ட சான்றிதழ் எடுத்து வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை தளர்த்துமாறு பள்ளிக்கல்வித்துறை மற்றும் டி.ஆர்.பி.க்கு தேர்வர்கள் இ-மெயில் அனுப்பி வருகின்றனர். இது தொடர்பாக நெட் செட் பட்டதாரிகள் சங்க செயலர் தங்கமுனியாண்டி கூறியதாவது, “இதற்கு முன்பாக நடந்த எந்த தேர்விலும் இந்த கட்டுப்பாடு இல்லை. ஆனால் டி.ஆர்.பி. மட்டுமே திடீரென்று கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கிடையில் தேர்வுக்கான அறிவிக்கையிலும் குறிப்பிடவில்லை. ஆகவே தேர்வர்கள் பாதிக்காத அடிப்படையில் இந்த விதிமுறைக்கு தளர்வு அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.