பெற்றோரை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சீயோன் புரம் பகுதியில் கொத்தனாரான ஜெயசிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சதீஷ், ஜெபின் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சதீஷ் திருமணமாகி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசிங் தனது தம்பியான ஞானசீலன் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் சாகப் போகிறேன் என தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் ஜெயசிங்கும், தங்கமும் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து ஞானசீலன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது அண்ணன் மற்றும் அண்ணியை அவரது மகன்கள் சரியாக கவனிக்கவில்லை. அதனாலேயே அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் தம்பதியினரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெபினை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஜெபின் கூறியதாவது, எனது தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தார். எனது தாய் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டார்.
நான் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்கு செல்லாமல், பெற்றோரை கவனிக்காமல் இருந்தேன். கடந்த 7-ஆம் தேதி மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்று சாப்பாடு, குழம்பு ஆகியவற்றை கீழே கொட்டி அழித்தேன். அப்போது வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு துன்புறுத்துகிறாராயே, இனி நானும் உனது அம்மாவும் சாவதே மேல் என தந்தை கூறினார். அதற்கு நீங்கள் உயிரோடு இருப்பதை விட செத்து விடுங்கள். அப்போது தான் நான் எனது விருப்பப்படி வாழ முடியும் என கூறி விட்டு தூங்க சென்றேன். அதன் பிறகே அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என ஜெபின் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.