தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தினசரி பாதிப்பு ஜனவரி 2-வது வாரத்தில் உயர்ந்து வந்த நிலையில் தடுப்பு விதிமுறைகள் அதிகரிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருவதால் முதல்வர் சமீபத்தில் அமலில் இருந்த ஊரடங்குகளில் தளர்வு மற்றும் பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லுரிகள் திறப்பு என்று அறிவிப்பு வெளியிட்டார்.
அந்த அடிப்படையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் முழுவதும் குறையாத நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்நிலையில் நடப்பாண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில் விரைந்து பாடங்களை முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .
மேலும் பள்ளிகள் முழு நேரமும் செயல்பட வேண்டும். அதனை தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மாணவர்களை முழு அளவில் பள்ளிக்கு நேரடியாகப் வரவழைத்து பாடம் நடத்த வேண்டும். இதனிடையில் அரைநாள் மட்டும் பள்ளிகளை நடத்துவது மற்றும் ஒரு சில மணி நேரத்தில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவது போன்றவை நடைபெற கூடாது. அவ்வாறு நடந்தால் அப்பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது..