மர்ம விலங்கு கடித்து குதறியதில் 12 ஆடுகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆடையூர் கிராமத்தில் விஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டில் 25 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தெய்வானை காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு பட்டியில் அடைத்து வைத்திருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் பட்டியிலிருந்த ஆடுகளை சென்று பார்த்தபோது அங்கிருந்த 25 ஆடுகளை மர்ம விலங்கு கடித்தது தெரிய வந்துள்ளது.
இதில் குடலை கிழித்த நிலையில் 12 ஆடுகள் இறந்து கிடந்தன. இதனையடுத்து மீதி 13 ஆடுகள் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தன. அவைகளை வனப்பகுதியில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்து கொன்று இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் வசித்து வரும் தெரு நாய்கள் ஆடுகளை கடித்து கொன்றதா என்று தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.