தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலை படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நீக்கப்பட்டது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 3 வருடங்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்துக்கும் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் சார்பாக பல்வேறு பொது கூட்டங்கள் நடைபெறும். மேலும் கட்சி சார்பில் பிரச்சாரங்கள் நடைபெறும். இதில் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றுவார்களா என்பதை உறுதி செய்ய முடியாது. இதன் காரணமாக தேர்தலுக்கு பின் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் குறைந்து வருகிறது.
ஆனால் தென்னாப்பிரிக்காவில் மீண்டும் நியோகோவ் என்ற புதிய வைரஸ் மற்றும் ஒமைக்ரான் தொற்றின் திரிபான பிஏ 2 வைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 2 வகையான வைரஸ் தொற்றும் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தேர்தலுக்கு பின் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் மீண்டும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகவே அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமக்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது..