தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பீர்முகமது ஒலியுல்லா என்ற இஸ்லாமிய துறவி அந்த மாவட்டத்தில் உள்ள தக்கலையில் அடக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆண்டுதோறும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட நாளில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் அன்றைய தினம் ஞான புகழ்ச்சி பாடல்களும் அந்த இடத்தில் பாடப்படும். இந்த விழா கிட்டத்தட்ட 18 நாட்கள் நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 2-ஆம் தேதி அன்று நினைவு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதேபோல் மார்க்க பேருரை 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பீர்முகம்மது சாகிபு ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பிப்ரவரி 26-ஆம் தேதி அன்று இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.