சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டார். முன்பாக அலகாபாத் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த வருட நவம்பர் மாதம் பதவியேற்றார்.
அவரை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) முடிவு செய்தது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவின் (கொலீஜியம்) கூட்டம் கடந்த வருட டிசம்பர் 14 மற்றும் கடந்த ஐனவரி 29ஆம் தேதி நடைபெற்றது. அதன்பின் இது குறித்த பரிந்துரையை மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று பொறுப்பு நீதிபதியாக உள்ள முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி பிறந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, அம்மாநில ஐகோர்ட்டு நீதிபதியாக 2007 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதன்பின் கடந்த 2019 ஆம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அங்கு இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். தற்போது அவர் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.