Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வளர்க்க ஆசைப்பட்டேன்” குழந்தையை கடத்திய என்ஜினியர்…. 3 நாட்களுக்கு பிறகு மீட்ட போலீஸ்…!!

என்ஜினியர் கடத்தி சென்ற குழந்தையை 3 நாட்களுக்கு பிறகு காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் காந்திநகர் தாலுகா அலுவலகம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் தனது மனைவி புத்தினி குழந்தைகள் ஆகாஷ், பிரகாஷ், துர்கி மற்றும் 1 1/2 வயது குழந்தையான லாக்டவுன் ஆகியோருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த குழந்தை கொரோனா உரடங்கு சமயத்தில் பிறந்ததால் அதற்கு லாக்டவுன் என பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் மதிய வேளையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் பகுதிக்கு அருகில் அம்பத்தூர் ஏரி இருப்பதால் குழந்தை தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் ஏரியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சுமார் 3 நாட்களுக்கு பிறகு கோயம்பேட்டில் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்தின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கட்டுமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த என்ஜினியரான பாலமுருகன் என்பவர் கட்டிட தொழிலாளியான சுஷாந்த் என்பவருடன் இணைந்து குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

அதன்பின் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் என்ஜினியர் பாலமுருகன் கூறியிருப்பதாவது, எனது நண்பர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே குழந்தையை வளர்க்கும் ஆசையில் சுஷாந்த் உதவியுடன் லாக்டவுனை கடத்தி சென்றேன். எனக்கு தெரிந்த வளர்மதி என்ற பெண்ணிடம் குழந்தையை கொடுத்து சில நாட்கள் கவனித்துக் கொள்ளுமாறு கூறினேன். ஆனால் அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து என்னால் குழந்தையை பராமரிக்க இயலவில்லை. மேலும் என்னை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இதனால் அச்சத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்தின் இருக்கையில் குழந்தையை வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Categories

Tech |