வருவாய் ஆய்வாளர் என நடித்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை ஏமாற்றிய கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள வேலம்பாளையம் பகுதியில் மகரஜோதி(29) என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் என கூறி போலியாக நடித்து அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முனியப்பன் உள்பட 7 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 4 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டு ஏமாற்றியுள்ளார்.
இதனையறிந்த நாமக்கல் நல்லிபாளையம் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் பன்னீர்செல்வம் இதுகுறித்து நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின்அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி மகரஜோதி மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் சங்கர் (33) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இதற்கிடையே மகரஜோதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சங்கரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.