Categories
அரசியல்

தமிழகத்தின் வேளாண் தட்பவெட்ப மண்டலங்களின்….. சிறப்பியல்புகள் என்னென்ன…. முழு விவரம் இதோ…!!!!

விவசாயம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான்.

இந்த விவசாய நிலத்தை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது மண் வகை, மழை அளவு, பாசன வசதி, பயிர்சாகுபடி, இதர பௌதீக, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஏழு தட்ப வெப்ப மண்டலங்கள் இருக்கின்ற காரணத்தினால் அந்த மண்ணில் பயிர்கள்  சாகுபடி செய்வதற்கு ஏற்ற நிலை தமிழ்நாட்டில் உருவாகின்றது.

வட கிழக்கு மண்டலம்:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர்(பகுதி), வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் வட கிழக்கு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் செம்மண், களிமண் கடலோர உவர் வண்டல் மண் ஆகியவை காணப்படுகிறது. இங்கு வருடத்திற்கு 1105 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பொழிவு இருக்கும். இங்கு நெல், தானியங்கள், பயிறு வகைகள், கரும்பு மற்றும் முந்திரி ஆகியவை பயிரிடப்படுகிறது.

வட மேற்கு மண்டலம்:

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்(பகுதி) ஆகியவை வடமேற்கு மண்டலங்கள் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சுண்ணாம்பு அற்ற செம்மண்,சுண்ணாம்பு அற்ற பழுப்பு மண், சுண்ணாம்பு மிக்க கரிசல்மண் காணப்படுகிறது. இங்கு வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர்களான நிலக்கடலை, சூரியகாந்தி, சிறுதானியங்கள் பெயரிடப்படுகிறது. இங்கு ஆண்டிற்கு சராசரி மழையளவு 875 மில்லி மீட்டர் ஆகும்.

மேற்கு மண்டலம்:

ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, கரூர் (பகுதி), நாமக்கல் (பகுதி), திண்டுக்கல் (பகுதி), பெரம்பலூர், அரியலூர் (பகுதி) ஆகிய மாவட்டங்களில் செம்மண், கரிசல் மண் நிறைந்து காணப்படுவதால் இங்கு நெல், மக்காச்சோளம், பயிறு வகைகள், நிலக்கடலை, தக்காளி, வெங்காயம் மற்றும் முருங்கை ஆகியவை பயிரிடப்படுகிறது. இங்கு ஆண்டிற்கு சராசரி மழையளவு 715 மில்லி மீட்டர் ஆகும்.

காவிரி டெல்டா மண்டலம்:

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர் (பகுதி), அரியலூர் (பகுதி), புதுக்கோட்டை (பகுதி), கடலூர் (பகுதி) ஆகிய மாவட்டங்களில் வண்டல்மண் மற்றும் செம்மண் காணப்படுவதால் நெல், உளுந்து மற்றும் பச்சைப்பயிறு சாகுபடி செய்யப்படுகிறது.
கத்திரி, மிளகாய் மற்றும் கீரை வகைகள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது. இங்கு ஆண்டிற்கு சராசரி மழையளவு 984 மில்லி மீட்டர் ஆகும்.

தெற்குமண்டலம்:

தெற்கு மண்டலங்களான மதுரை, புதுக்கோட்டை (பகுதி), திண்டுக்கல் (பகுதி), சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடலோர வண்டல் மண், செம்மண், அடர் செம்மண், கரிசல் மண் காணப்படுவதால் இங்கு அதிகமாக கரும்பு, மஞ்சள், வாழை, பருத்தி ஆகியவை  பயிரிடப்படுகிறது. இங்கு ஆண்டிற்கு சராசரி மழையளவு 857 மில்லி மீட்டர் ஆகும்.

அதிக மழைபெறும் மண்டலம்:

அதிக மழை பெறும் மண்டலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர உவர் வண்டல் மண், அடர் செம்மண் ஆகியவை காணப்படுகிறது. இங்கு மலைப்பகுதிகளில் ரப்பர், கிராம்பு, குச்சிக்கிழங்கு மற்றும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. சமமான பகுதிகளில் நெற்பயிர் பயிரிடப்படுகிறது. கோடை காலங்களில் உளுந்து அல்லது பச்சைப் பயிறு, எள் ஆகியவை ஒரு சில இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டிற்கு சராசரி மழையளவு 1420 மில்லி மீட்டர் ஆகும்.

மலைப்பிரதேச மண்டலம்:

மலைப்பிரதேசம் மண்டலங்களாக நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல்), கொல்லி மலை,, பச்சை மலை, ஏற்காடு, ஏலகிரி, ஜவ்வாது மலை மற்றும் பொதிகை மலை ஆகிய பகுதிகளில் செம்மண் நிறைந்து காணப்படுவதால் இங்கு காப்பி, தேயிலை ஆகியவை அதிகமாக பயிரிடப்படுகிறது. இங்கு ஆண்டிற்கு சராசரி மழையளவு 2124 மில்லி மீட்டர் ஆகும்.

Categories

Tech |