வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இயற்கை உரங்களில் மிக எளிமையாகவும் மிக குறைந்த செலவிலும் கிடைக்கக்கூடியது பசுந்தாள் மற்றும் பசுந்தாள் சார்ந்த உரங்கள். மண் வளத்தை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது இயற்கை உரங்கள் மட்டுமே. அப்படிப்பட்ட இயற்கை உரங்களில் மிக எளிதாகவும் குறைந்த செலவிலும் கிடைக்கக்கூடியது பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள்.
பசுந்தாள் உரம்:
பசுந்தாள் உரம் என்பது ஒரு பயிரினை பயிரிட்டு, அதனை மடக்கி உழுது நிலத்தில் சேர்ப்பது பசுந்தாள் உரம் ஆகும். அவற்றில் மிக முக்கியமானவை தக்கை பூண்டு, கொளுச்சி, சணப்பை, அகத்தி, சீமை அகத்தி போன்ற பயிர்கள்.
பசுந்தழை உரங்கள்:
பசுந்தழை உரம் என்பது வேறு ஒரு இடத்தில் இருந்து பச்சை குழை, தழைகளை சேர்ப்பது. இந்த வகை குழை, தழைகளை சேகரித்து நடவு செய்யும் வயலில் இட்டு மிதித்து விடுவது. பசுந்தழை உரங்களில் மிக முக்கியமானவை ஆவாரை, புங்கம், பூவரசு, வேம்பு, ஆடாதொடா, நொச்சி, வாதநாராயணன், சவுண்டை ஆகியவை.
பசுந்தாள் உரங்களின் நன்மைகள் என்னென்ன:
- இந்த உரம் பயிர்கள் காற்றில் இருக்கின்ற தழைச்சத்தை 70 சதவீதம் வரை வேர் முடிச்சுகளில் நிலைநிறுத்துகிறது. அதில் ஒரு பகுதியை மட்டும் நிலத்தில் சேர்க்கின்றது. அதனால் நிலம் நல்ல வளமடைகிறது.
- அதுமட்டுமல்லாமல் ஒரு ஏக்கருக்கு 25 கிலோ முதல் 45 கிலோ வரை தலை சத்துக்களை மண்ணிற்கு வழங்குகிறது. இந்த உரம் நிலத்தின் அமைப்பைப் சீர்செய்கிறது. மண் அரிப்பை தடுப்பது மட்டுமல்லாமல் வளமான மேல் மண்ணை பாதுகாக்கின்றது.
- மண்ணில் உள்ள கழிவுப் பொருள்களை அதிக படுத்துவதோடு மட்டுமல்லாமல் மண்ணின் நீர்ப் பிடிப்பு தன்மையை அதிகரிக்கிறது.
- மண்ணின் கீழ் பகுதியில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் மேல் மட்டத்திற்கு கொண்டு வந்து சேர்த்து பயிருக்கு கிடைக்க வழிவகுக்கிறது.
- பார் நிலத்தினை சீர் செய்கின்றது.
- இந்த உரப் பயிர்களை நிலத்தில் இடுவதால் விளை பொருள்களின் தரம் அதிகரிக்கின்றது.
பசுந்தாள் உரம் இடும் முறைகள்:
வயலில் பசுந்தாள்களை நடவுக்கு இரு வாரங்களுக்கு முன்பே இட வேண்டும். ஏக்கருக்கு 2,500 கிலோ என்ற அளவில் இடவேண்டும். இந்தப் பசுந்தாள் பயிர் பூப்பூக்க தொடங்கிய உடனே மடக்கி வயலை உழ வேண்டும். இது மிக எளிதாகவும் குறைந்த செலவிலும் கிடைக்கக்கூடிய உரம். இதனை விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.