மதுரவாயல் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை மதுரவாயல் அடுத்துள்ள அடையாளம்பட்டு பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ‘பி’ பிளாக்கில் 6வது மாடியில் அருண் சவுன் என்பவர் வசித்து வருகிறார். 42 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 13 வயதில் ஆருஷ் என்ற மகன் இருக்கிறான். இவர் அயப்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கடத்த 9ஆம் தேதி வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டபின் படுத்து தூங்கி விட்டனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் பெற்றோர் எழுந்து பார்த்துள்ளனர். அப்போது மகன் ஆருஷ் வீட்டில் இல்லை. இதனால் அதிர்ந்துபோன பெற்றோர் குடியிருப்பை சுற்றி தேடியுள்ளனர்.அப்படி தேடிசெல்லும்போது அதே அடுக்குமாடி குடியிருப்பின் சி பிளாக்கில் முதல் தளத்திலுள்ள பால்கனியில் ஆருஷ் பிணமாக கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ந்துபோன பெற்றோர் அலறினர். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து ஆருஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் , தந்தை மகனிடம் நீ மேற்படிப்பிற்கு வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்று சொன்னதாகவும், இதில் துளியும் மகனுக்கு விருப்பம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது .அத்துடன் அடிக்கடி மகன் செல்போன் உபயோகிப்பதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அவர் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான ஆருஷ் 9ஆம் தேதி இரவு சாப்பிட்டு உறங்கி உள்ளார்.
அதன்பின் யாரும் பார்க்காத நேரம் நள்ளிரவு நேரத்தில் எழுந்து அந்த வீட்டிலிருந்து பக்கத்தில் சி பிளாக் சென்று, பின்அங்கு இருக்கும் ஆறாவது மாடி வரண்டாவில் உள்ள ஜன்னலில் ஏறி நின்று தற்கொலை தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கு முன்னதாக ஆருஷ் எழுதிய கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியது.அதில் எழுதப்பட்டதாவது, என்னால் மனஅழுத்தம் தாங்க முடியவில்லை .
நான் தற்கொலை செய்து கொண்டதற்கு யாரும் காரணம் இல்லை. அம்மா உன்னுடைய உடல்நலத்தை நன்றாகப் பார்த்துக்கொள் .அப்பா நீங்கள் எப்போதுமே காமெடியாகவே பேச வேண்டும். அண்ணா என்னை மன்னித்துவிடு என்று கடிதத்தில் இருந்ததாக போலீசார் கூறினர் . மேலும் இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.