சென்னையில் இன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்துகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் சட்டவிரோதமாக இருசக்கர வாகன பந்தயங்களைத் தடுக்கும்விதமாகவும் நகரெங்கும் 15 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில் மிக முக்கியமான 300-க்கும் மேற்பட்ட இடங்களில், வாகன சோதனை நடத்தப்படும் எனக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சாலையில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களையும் மது அருந்தி ஓட்டுபவர்களையும் காவல் துறையினர் விரட்டிப் பிடித்தனர்.