கேரளாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆண்டிப்பட்டி காவல்துறையினர் அப்பகுதியில் இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(48), தேவிகுளத்தை சேர்ந்த ஜோமன் (48) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஆண்டிப்பட்டி அடுத்துள்ள பிராதுகாரன்பட்டியில் வசிக்கும் கழுவன் (38) என்பவரிடம் கஞ்சா கொடுக்க வந்தது தெரியவந்தது. இதனை அறிந்த காவல்துறையினர் கழுவனையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்துள்ளனர்.